உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதிபெற்றது தென்னாபிரிக்க அணி
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் மோதின. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக விளங்கும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் வானவேடிக்கை காட்டியது. இமாலய இலக்கு என்பதால் துவக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து மழைபெய்ததால் டி.எல்.எஸ். விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் அரையிறுதிக்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் தக்கவைத்துள்ளது. இந்தத் தோல்வி புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து ரன் ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்தின் இன்றைய தோல்வியினால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
ஏற்கனவே, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கான இரண்டு அணிகள் உறுதியான நிலையில், மீதமுள்ள 2 இடங்களைப் பிடிக்க மற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.