உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றியோடு தொடங்கின.
ஹராரே,
உலகக் கோப்பை தகுதி சுற்று
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்பட 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றன.
மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான நேற்று ஹராரேயில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாள அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குஷல் புர்டெல் (99 ரன், 95 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் (66 ரன்) முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த குஷல் மாலா 41 ரன்னும், கேப்டன் ரோகித் பாடெல் 31 ரன்னும் எடுத்தனர். ஆனாலும் கடைசி கட்டத்தில் ஸ்கோர் சற்று குறைந்து போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நேபாள அணி 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நரவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே வீரரின் அதிவேக சதம்
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 44.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 4-வது சதத்தை எட்டிய கேப்டன் கிரேக் எர்வின் 121 ரன்களுடனும் (128 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ), 6-வது சதத்தை அடித்த சீன் வில்லியம்ஸ் 102 ரன்களுடனும் (70 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
வெற்றியை நெருங்கிய போது பவுண்டரியோடு சதத்தை சுவைத்த சீன்வில்லியம்ஸ் அதிவேகமாக சதம் விளாசிய ஜிம்பாப்வே வீரர் (70 பந்துகளில்) என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். கிரேக் எர்வின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ்- அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஜான்சன் சார்லஸ் (66 ரன்), கேப்டன் ஷாய் ஹோப் (54 ரன்), ேராஸ்டன் ேசஸ் (55 ரன்), ஜாசன் ஹோல்டர் (56 ரன்) அரைசதம் அடித்தனர்.
அடுத்து களம் இறங்கிய அமெரிக்க அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 'கன்னி' சதத்தை கடைசி ஓவரில் எட்டிய அமெரிக்க வீரர் கஜானந்த் சிங் 101 ரன்களுடன் (109 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவர் வெஸ்ட் இண்டீசில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டங்களில் இலங்கை- ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து-ஓமன் அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.