அபராஜித் அபாரம் : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

Update: 2023-06-15 17:04 GMT

கோவை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோவையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணியில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 36 (33) ரன்களும் விஜய் சங்கர் 28 (28) ரன்களும் எடுத்தனர்.

முடிவில் ராஜேந்திரன் விவேக் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் குமார் மற்றும் ரஹில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெகதீசன் 13 (9) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிரதோஷ் பால் 25 (25) ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக பாபா அபராஜித் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் சஞ்சய் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடியாக ரன்கள் குவித்த பாபா அபராஜித் 29 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் ஹரிஷ் குமார் 12 (13) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சேப்பாக் அணி 15.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது. திருப்பூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்