உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சாஹல், அர்ஷ்தீப் விடுபட்டுள்ளனர்: ஹர்பஜன்சிங் சொல்கிறார்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சாஹல், அர்ஷ்தீப் விடுபட்டுள்ளனர் என ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

Update: 2023-09-07 22:11 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இரு வீரர்கள் விடுபட்டு இருப்பதாக நினைக்கிறேன். ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். மற்றொருவர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங். இதில் அர்ஷ்தீப் இடக்கை பவுலர் என்பதால் புதிய பந்தில் முதல் 10 ஓவருக்குள் பந்து வீச அழைக்கும் போது, அணிக்கு பலன் அளிப்பார். எப்போதுமே இடக்கை வேகப்பந்து வீச்சாளருக்கு விக்கெட் வீழ்த்துவதற்குரிய தகுந்த கோணம் கிடைக்கும்.

உதாரணமாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி அல்லது மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்ற போது மிட்செல் ஸ்டார்க் மிரட்டலாக பந்து வீசினார். நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லத்தை முதல் ஓவரிலேயே வெளியேற்றினார். வேகத்துடன் 'ஸ்விங்' செய்யும் போது அவர்களை சமாளிப்பது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். . 

யுஸ்வேந்திர சாஹல் தனிவீரராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமைசாலி. அதை அவர் பலமுறை நிரூபித்து இருக்கிறார். அவர் வேறு நாட்டு அணியில் விளையாடி இருந்தால் எல்லா போட்டிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்று இருப்பார். அவர் அணியில் இருக்க வேண்டும். நான் தேர்வு குழுவில் இருந்திருந்தால் நிச்சயம் அவரை சேர்த்து இருப்பேன்.

சூர்யகுமார் முழுமையான ஒரு வீரர். உலகக் கோப்பை போட்டிக்கான ஆடும் லெவனில் அவரும் இருக்க வேண்டும். ஏனெனில் மிடில் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். அவர் விளையாடும் பேட்டிங் வரிசை (5 அல்லது 6-வது வரிசை) மிகவும் கடினமானது. 25-30 ஓவர்களுக்கு பிறகு களம் இறங்கும் போது எந்த பகுதியில் பீல்டர் இன்றி இடைவெளி இருக்கிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப பந்தை பவுண்டரிக்கு விரட்ட வேண்டியது அவசியமாகும். இந்த பணியை தற்போதைய இந்திய அணியில் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது. அத்துடன் அதிரடி காட்டுகிறாரோ? இல்லையோ? அவர் களத்தில் இருக்கும் வரை எதிரணிக்கு நெருக்கடி அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அவரால் வெற்றி தேடித்தரக்கூடிய இன்னிங்சை வெளிப்படுத்த முடியும். அவரால் 20 பந்துகளில் 50-60 ரன்களை நொறுக்க முடியும்.

இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்