'கம்மிங் ஹோம்' பின்னனி பாடலுடன் பயிற்சி வீடியோ வெளியிட்ட பும்ரா...!!
ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பெங்களூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா,கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
கடந்த மாதம் அவர் காயத்திலிருந்து குணமடைந்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி முகாமில் (என்சிஏ) பயிற்சி மேற்கொள்வதாகத் தகவல்கள் தெரிவித்து இருந்தன. பயிற்சியின் போது அவர் ஒரு நாளில் 7 ஓவர் வரை பந்து வீசியதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை பும்ரா வெளியிட்டுள்ளார்.
'கம்மிங் ஹோம்' என்ற பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது அவர் இந்திய அணிக்குத் திரும்பி வருவதற்கான அறிகுறி என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.