ஆமதாபாத்தில் 27-ந் தேதி பி.சி.சி.ஐ. சிறப்பு பொதுக்குழு கூட்டம் - உலகக்கோப்பை போட்டி தொடர்பாக ஆலோசனை
உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆமதாபாத்தில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு கமிட்டிகளை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் அங்கீகாரம் பெற்ற பிசியோதெரபிஸ்ட் மற்றும் டிரெய்னர்களை நியமிப்பது மற்றும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க வாரியத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் கமிட்டியை திருத்தி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் வீரர்களை ஐ.பி.எல். போட்டியை பொறுத்து 3 குழுவாக அனுப்புவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. அதாவது ஐ.பி.எல். லீக் போட்டி முடிந்ததும் முதல் குழுவும், முதல் இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டம் முடிந்ததும் 2-வது குழுவும், இறுதிப்போட்டி முடிந்தும் கடைசி குழுவும் இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் என்று தெரிகிறது.
13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை 12 நகரங்களில் நடைபெறும் என்றும், இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.