ஆசிய கோப்பை: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பல்லகெலே,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது..அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து 4.6வது ஓவரில் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பாகிஸ்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ரோகித் சர்மா போல்ட் ஆகி ஆட்டமிழந்தார் .
அடுத்து விராட் கோலி களமிறங்கினார் .நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் 4 ரன்களுக்கு விராட் கோலி வெளியேறினார்.பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களில் ஹரிப் ரவுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டி மீண்டும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கில் ஹாரிப் ரவுப் பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார் .இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.