நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்...பாண்ட்யாவுக்கு பதில் இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர்
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைப்பெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைப்பெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.
இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்ட்யா இடத்தில் யாரை களம் இறக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒருவேளை நான் இந்திய அணியில் இருந்தால் தற்சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிசான் ஆகியோரை பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக தேர்வு செய்வேன். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த நியூசிலாந்து பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக இந்தியாவின் டாப் ஆரடர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி வருவது பிரச்சினையாக இருக்கிறது.
எனவே அதை சமாளிக்க நீங்கள் உங்களுடைய பேட்டிங் ஆழத்தை அதிகரித்து தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை பாண்ட்யாவுக்கு பதில் அஷ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும்.
எனவே இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிசான் அல்லது சூர்யகுமார் 6-வது இடத்தில் விளையாட வேண்டும். அதே சமயம் வேகத்துக்கு சாதகமாக மைதானம் இருக்கும் பட்சத்தில் தாக்கூருக்கு பதிலாக ஷமியை கொண்டு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.