மழையால் 5வது நாள் ஆட்டம் ரத்து..! இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4-வது டெஸ்ட் 'டிரா '
ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 317 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி 189 ரன்னும், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 99 ரன்னும் எடுத்தனர்.
இதனையடுத்து 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 44 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். மிட்செல் மார்ஷ் நிதானத்தை கடைபிடிக்க மறுமுனையில் லபுஸ்சேன் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார்.
161 பந்துகளில் தனது 11-வது சதத்தை எட்டிய லபுஸ்சேன் 111 ரன்னில் (173 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஜோ ரூட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். 71 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அத்துடன் நேற்றைய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது மிட்செல் ஸ்டார்க் 31 ரன்னுடனும், கேமருன் கிரீன் 3 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மழை நின்று போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மான்செஸ்டரில் மழை பெய்தது. இதனால் போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரத்து என அறிவிக்கப்பட்டது.இதனால் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .
ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.