2-வது டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 86/1

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2023-07-22 00:09 GMT

image courtesy: BCCI twitter

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விராட் கோலி, ஜடேஜா இருவரும் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அவர் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான் 25 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 128 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல்அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கெமர் ரோச், ஜோமல் வாரிக்கன் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் ஜோமல் வாரிக்கன் 2 விக்கெட்டும் ஷானன் கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். சந்தர்பால் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து கிர்க் மெக்கென்சி களமிறங்கினார்.

இந்த நிலையில் 41 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 37 ரன்களுடனும் மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்