நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இந்தியா போராடி வெற்றி - 30 ஓவர்கள் வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 ரன் இலக்கை கூட இந்திய அணி போராடியே எட்டிப்பிடித்தது.
லக்னோ,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக உம்ரான் மாலிக்குக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி டிவான் கான்வேவும், பின் ஆலெனும் நியூசிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். ஆடுகளம் சுழல் ஜாலத்துக்கு கைகொடுக்க, இந்திய பவுலர்கள் மிரட்டினர். பின் ஆலென் (11 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் சிக்கினார். கான்வேவை (11 ரன்) வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார்.
சாஹல், வாஷிங்டன், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா என்று 4 சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தொடர்ச்சியாக பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார். கிளென் பிலிப்ஸ் (5 ரன்), டேரில் மிட்செல் (8 ரன்) சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.
வலுவான ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்னை கூட தொடவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னெர் 19 ரன் எடுத்தார்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய நியூசிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 99 ரன்களே எடுக்க முடிந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்தின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். எக்ஸ்டிரா வகையில் 9 வைடு உள்பட 10 ரன் நியூசிலாந்துக்கு கிடைத்தது. இல்லாவிட்டால் அந்த அணியின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.
இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர்,யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 100 ரன் தேவை என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களும் திண்டாடினர். நியூசிலாந்தும் முழுமையாக சுழல் தாக்குதல் மூலம் நெருக்கடி கொடுத்தது. பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அபூர்வமாக தெரிந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும், ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் வெளியேறினர். வழக்கமாக மின்னல் வேகத்தில் மட்டையை சுழற்றும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவும் ரன் எடுக்க சிரமப்பட்டார். அத்துடன் அவசரப்பட்டு வாஷிங்டன் சுந்தரை (10 ரன) ரன்-அவுட்டில் பலிகடாவாக்கினார்.
போட்டியும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கடைசி ஓவர் வரை நகர்ந்தது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிக்னெர் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 3 ரன் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்ததால் டென்ஷன் மேலும் எகிறியது. ஒரு வழியாக 5-வது பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரிக்கு தூக்கி விட்டு பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்னிங்சில் அவர் அடித்த ஒரே பவுண்டரி இது தான்.
இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்களுடனும் (31 பந்து, ஒரு பவுண்டரி), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். சூர்யகுமார் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 1-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.
* லக்னோ மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த ஐந்து 20 ஓவர் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருந்தது. இப்போது தான் முதல் முறையாக 2-வது பேட்டிங் செய்த அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
* இந்த ஆட்டத்தில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிக்சர் அடிக்கவில்லை.
* இரு அணியினரும் சுழற்பந்து வீச்சுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இந்திய தரப்பில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் 13 ஓவர்களும், நியூசிலாந்து சார்பில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் 17 ஓவர்களும் போட்டனர். மொத்தம் 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியுள்ளனர். ஐ.சி.சி.யின் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற இரு நாடுகள் மோதிய 20 ஓவர் போட்டி ஒன்றில் அதிகமாக சுழற்பந்து வீசப்பட்ட ஆட்டம் இது தான்.
* 'இன்னும் 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்'என்று நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெர் தோல்விக்கு பிறகு கூறினார்