2வது டி20 போட்டி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்...தொடரை கைப்பற்றி அசத்தல்...!

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது

Update: 2023-03-12 13:26 GMT

Image Courtesy: AFP

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்கதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் வங்கதேசம் களம் புகுந்ததது.

அந்த அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்