பள்ளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி. அணி 'சாம்பியன்'
சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில் சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி- பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ராமச்சந்திரா அணி 8 விக்கெட்டுக்கு 120 ரன்னில் கட்டுபடுத்தப்பட்டது. ஓம் நிதின் 3 விக்கெட்டும், விஷால் 2 விக்கெட்டும் சாய்த்தனர். அடுத்து களம் இறங்கிய பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. அதிகபட்சமாக ஓம் நிதின் 37 ரன்களும், ரோகித் 35 ரன்களும் எடுத்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஓம் நிதின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் பரிசுகளை வழங்கினார்.