கட்டிட பணிகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள்

நமது நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலைவாய்ப்புகளை கொண்டதாக கட்டுமானத்துறை உள்ளது.

Update: 2019-04-06 08:24 GMT
இந்தியாவின் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களை சார்ந்தவர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கட்டுமானத் துறையின் பங்கு சுமார் 6 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், மூன்று கோடி தொழிலாளர்கள் கட்டுமானத் துறைக்கு தேவைப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால், அந்த அளவுக்கு, பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்று அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம்கூட முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று ஹட்கோ புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

கிராமப்புற இளைஞர்கள் பலரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, குடும்ப நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பதற்கான சூழல் இல்லாத நிலையில் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து பணி புரிவதாக அறியப்பட்டுள்ளது. அத்தகைய இளைஞர்களுக்கு கட்டுமான துறையில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், மேசன், ஷட்டரிங், கார்பென்டர், கம்பி கட்டுபவர், சாரம் அமைப்பவர் ஆகிய பிரிவுகளில் ஒரு சில தனியார் அமைப்புகள் பயிற்சிகள் அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

தொழிற் பயிற்சிகள்

கட்டுமானத் தொழிலாளர்களை உலகத்தரத்திற்கு இணையாக தயார்படுத்துதல், தொழில் நுட்ப அறிவுக்கான பயிற்சிகளை அளிப்பது, வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து தரம் வாய்ந்த தொழிலாளர்களாக மாற்றுவது என்ற அடிப்படையில் அந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொழில் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும் கட்டுமானத் தொழிலை உதவித் தொகை அளித்தும் ஒரு சில தனியார் அமைப்புகள் கற்றுத் தருவதாகவும் அறியப்பட்டுள்ளது.

சுய வேலை வாய்ப்பு வசதி

குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு வாழ்க்கைக்கான வழியை காட்டுகிறது. அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தக்க வேலை வாய்ப்பை பெற்று வாழ்வில் உயர இயலும். ஆர்வம் கொண்டவர்கள் கட்டுமான துறையில் சப்-கான்ட்ராக்டர் என்ற நிலையில் சுய வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்