மென்மையான தரைத்தள அமைப்புக்கு தக்கை ஓடுகள்
தரைத்தள பதிகற்களுக்கான மாற்று முறையாக வரும் காலங்களில் தக்கை தரைத்தளம் அமையலாம்.
மார்பிள், கிரானைட், போர்சிலின் மற்றும் செராமிக் உள்ளிட்ட பலவகை தரைத்தள பதிகற்கள் பற்றி நமக்கு தெரியும். அந்த முறைகளிலிருந்து சற்று வேறுபட்டு இருப்பது மரங்களிலிருந்து கிடைக்கும் தக்கை தரை (Cork flooring) ஆகும். மேற்கண்ட தரைத்தள பதிகற்களுக்கான மாற்று முறையாக வரும் காலங்களில் இவ்வகை தக்கை தரைத்தளம் அமையலாம்.
இயற்கை தோற்றம்
இவ்வகை தரைத்தளத்தை எளிதாக சுத்தப்படுத்த முடியும் என்பதோடு, சற்று குறைவான பட்ஜெட்டில் வீட்டின் தோற்றத்தை கண்கவரும் விதத்திலும் மாற்றியமைக்கலாம். மண் போன்ற பழுப்பு நிறத்தில் உள்ள அதன் நிறம் மற்றும் உள்புற கட்டமைப்பு ஆகியவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் இயற்கையான தோற்றத்துடனும், நடப்பதற்கு மென்மையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரால் பாதிக்கப்படுவதில்லை
‘கார்க் புளோர்’ என்பது மரத்தின் உரிக்கப்பட்ட பட்டைகளை உலர வைத்து, வேண்டிய வடிவங்களுக்கேற்ப அழுத்தம் தரப்பட்டு ஓடுகளாக உருவாக்கப்படுகின்றன தக்கை தரை ஓடுகளில் இயற்கையாக ஒருவகை மெழுகுப் பொருளை கொண்டுள்ளதால், தண்ணீர் அவற்றில் எளிதாக ஊடுருவ இயலுவதில்லை. மேலும், குளிர்காலத்தில் அவை வெதுவெதுப்பாக இருப்பதோடு, பாதங்களில் ஒவ்வாமை உள்ளவர்கள் பயன்படுத்த ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.
எல்லா இடங்களுக்கும் ஏற்றது
தக்கைகள் இயற்கையாகவே நெருப்பால் பாதுக்காத தன்மை மற்றும் ஒலியை எதிரொலிக்காத தன்மை ஆகிய தன்மைகளை கொண்டது. ஒலி எதிரொலிப்பு இல்லாத காரணத்தால், வீடில் உள்ள ‘ஹோம் தியேட்டர் சிஸ்டம்’ செயல்பாடு நன்றாக இருக்கும். வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகிய இடங்களில் உபயோகப்படுத்தலாம். வெவ்வேறு வகை அளவு மற்றும் வடிவங்களில் சந்தையில் கிடைப்பதால், இதர தரைத்தள ஓடுகள்போல பயன்படுத்தலாம்.
நெகிழ்வு தன்மை
அதன் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றை பொறுத்து வெவ்வேறு பட்ஜெட்டில் கிடைக்கின்றன. இவ்வகை தரைத்தள அமைப்பில் தரைத்தள சரியான மட்டம் கொண்டதாக சமன் செய்யப்பட வேண்டும் என்பதில்லை. காரணம், தக்கை நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக இருப்பதால், தரையில் எளிதாக பதிக்க இயலும். வீட்டு உபயோக பொருட்களால் சிறிய பள்ளங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பழைய நிலைக்கு எளிதாக திரும்பும் தன்மை கொண்டது.
இரண்டு வகைகள்
‘பாலியூரித்தீன்’ அடிப்படையாக கொண்ட மேற்பூச்சு மற்றும் தண்ணீர் அடிப்படையாக கொண்ட சற்றுக் கடினமான மேற்பூச்சு ஆகிய இரண்டு விதங்களில் தக்கை தரைத்தள பதிகற்கள் கிடைக்கின்றன. நீரை அடிப்படையாக கொண்ட மேற்பூச்சு, சுற்றுச்சூழலுக்கு நன்மை அளிப்பதாக கருதப்படுகிறது. ‘பாலியூரித்தீன்’ வகையானது சற்றே கூடுதல் பட்ஜெட் கொண்டதாக இருக்கும்.
தக்கை வகை தரைத்தள அமைப்புகள் எளிதில் விரிசல்கள் அல்லது சிராய்ப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்பதோடு சரியான பராமரிப்பு காரணமாக, 25 வருடங்களுக்கும் மேலாக உழைப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.