வீடுகளை அழகு செய்யும் ‘பெயிண்டிங்’ முறைகள்

செங்கல், சிமெண்டு ஆகியவற்றை கொண்டு அமைத்த கட்டிடங்களை, அழகிய இல்லமாக மாற்றக்கூடிய தன்மை பெயிண்டிங் என்ற வண்ணப்பூச்சு வகைளுக்கு உண்டு.

Update: 2018-04-27 22:15 GMT
பலவிதங்களில் இருக்கும் வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசுவதற்கு முன்பு நடைமுறையில் இருக்கும் ‘பெயிண்டு’ வகைகள் பற்றியும், வீடுகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் எங்கெல்லாம் அழகிய ‘பெயிண்டிங்’ செய்யலாம்..? என்பது பற்றி பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ‘பெயிண்டர்கள்’ அளிக்கும் முக்கியமான குறிப்புகளை காணலாம்.

நான்கு இடங்கள்

பொதுவாக, வீடுகளுக்கு நான்கு இடங்களில் ‘பெயிண்டு’ வகைகள் பூசப்பட வேண்டியதாக இருக்கும். முதலாவது, உட்புற சுவர்கள் மற்றும் மேற்கூரைகள். இரண்டாவது, வெளிப்புற சுவர்கள். மூன்றாவது, வீடுகளில் உள்ள மரச்சாமான்கள். நான்காவது, வீடுகளில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட மற்ற உலோக சாமான்கள் ஆகியவையாகும்.

வீடுகளுக்குள் ‘பெயிண்டிங்’

வீடுகளின் உட்புறமாக குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துவதில் ‘இண்டீரியர் பெயிண்டு’ வகைகள் முக்கியமான இடத்தில் இருக்கின்றன. உட்புறம் பூசப்படும் வண்ணங்களில் ‘டிஸ்டெம்பர்’ மற்றும் ‘எமல்‌ஷன்’ ஆகிய இரண்டு வகைகள் உண்டு. ‘டிஸ்டெம்பர்’ வகை வண்ணங்களில் ‘அக்ரிலிக்’, ‘சிந்தெடிக்’, ‘டிரை டிஸ்டெம்பர்’ என்று பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘அக்ரிலிக்’ வகை வண்ணங்கள் தண்ணீர் பட்டாலும் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. அதனால் உட்புறமாக உள்ள செங்கல் சுவர்களை பூசுவதற்கும், உட்புறம் இருக்கும் மற்ற சுவர் பரப்புகளை பூசுவதற்கும் இவ்வகை பரிந்துரை செய்யப்படுகிறது.

தண்ணீரால் பாதிப்பு

‘சிந்தெடிக் மற்றும் டிரை டிஸ்டெம்பர்கள்’ தண்ணீரால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவையாக இருப்பதால் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இன்னொரு வகையான ‘எமல்‌ஷன்’ பெயிண்டுகள் ‘ரெகுலர், எக்கானமி மற்றும் பிரிமியம்’ என்று மூன்று வகைகளில் உள்ளன. ‘பிளாஸ்டிக்’ வகையை சேர்ந்ததாக இருப்பதால் தண்ணீரால் உண்டாகும் பாதிப்புகள் இல்லாமல் நீடித்து பயன் தரக்கூடியவையாக இவை உள்ளன.

வெளிப்புற ‘பெயிண்டிங்’

வெளிப்புறம் பூசக்கூடிய வண்ணங்கள் சுவர்களுக்கு பாதுகாப்பாகவும், அழகான தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் ‘ஆயில் பேஸ்டு பெயிண்டுகள்’ பெரும்பாலும் வெளிப்புறமாக பூசுவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ‘சிமெண்டு பெயிண்டு’, ‘அக்ரிலிக் எமல்‌ஷன்’ மற்றும் ‘டெக்ஸர்டு பிளாஸ்டர்’ என்ற வகைகள் வெளிப்புற பூச்சுகளில் உள்ளன. இவற்றில் ‘அக்ரிலிக் எமல்‌ஷன்’ வகையானது நல்ல தோற்றத்தையும், தட்பவெப்பத்திலிருந்து பாதுகாப்பையும் தருவதாக சொல்லப்படும் நிலையில் அது நடைமுறையில் அதிகபட்ச உபயோகத்தில் இருந்து வருகிறது.

உலோக பொருட்கள்


இரும்பு, செம்பு மற்றும் பித்தளை வகை பொருட்களுக்கு ‘எனாமல்’ வகை வண்ணம் பூசுவது வழக்கமான முறை. அதில் ‘பிரிமியம் எனாமல் பெயிண்டு’ வகையானது நல்ல தோற்றத்தையும், தட்பவெப்ப பாதுகாப்பையும் தருவதாக இருப்பதால் உலோக சாமான்களுக்கு பூசுவதற்கு ஏற்றதாக குறிப்பிடப்படுகிறது.

மரச்சாமான்கள்

மரத்தால் செய்யப்பட்ட அனைத்து வகை பொருட்களின் மேலேயும் பூசப்படும் பொருள் ‘வார்னிஷ்’ ஆகும். கதவு, ஜன்னல், கட்டில், டேபிள், மேசை ஆகிய அனைத்துவகை பொருட்களுக்கும் மேற்புறத்தில் ‘கோட்டிங்’ செய்யப்படும் பொருளாக ‘வார்னிஷ்’ இருக்கிறது. இப்போது அதற்கு பதிலாக ‘டச் வுட் பெயிண்டு’ என்ற புதிய வகை அறிமுகமாகி உள்ளது. மரப்பொருட்களின் நீடித்த உழைப்புக்கு அது உறுதுணையாக உள்ளது.

மேலும் செய்திகள்