கட்டிட வடிவமைப்பில் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்கள்

பொதுவாக, அனைத்து வகையான கட்டிடங்களும் இரண்டு முக்கியமான அம்சங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைப்பு செய்யப்படுகின்றன.

Update: 2017-06-10 01:00 GMT
பொதுவாக, அனைத்து வகையான கட்டிடங்களும் இரண்டு முக்கியமான அம்சங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைப்பு செய்யப்படுகின்றன. முதலாவது அம்சம் பாதுகாப்பு என்பதாகும். இரண்டாவது அம்சம் பயன்பாடு என்பதாகும். கட்டுமான வடிவமைப்பாளர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) மற்றும் கட்டுமான பொறியாளர்கள் ஆகியோர்களது முக்கியமான பணி என்பது, மேற்கண்ட இரண்டு நிலைகளிலும் ஒரு கட்டமைப்பு முழுமையான தன்மையுடன் இருக்குமாறு, கட்டுமானப்பணிகளின் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து நிலைகளிலும் கவனித்துக்கொள்வதாகும்.

விதவிதமான இடங்கள்

கட்டிடங்கள் எப்போதும் வலுவான பூமி அமைப்பு உள்ள இடங்களிலேயே அமைக்கப்படுவதில்லை. பாறைகள் உள்ள இடம், களிமண் பூமி, மண்ணில் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை, மணற்பாங்கான இடம், ஈரப்பதம் அதிகமாக உள்ள இடம் என்று பல்வேறு தன்மைகள் கொண்ட நிலங்களில் வெவ்வேறு வகையான நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்ட கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் கட்டுமான பணிகளின்போது வேறுபட்ட பல நிலைகளில் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த வி‌ஷயங்களை உறுதி செய்து கொள்ளவேண்டியதாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் பயன்பாடு ஆகிய இரு நிலைகளைப்பற்றி வடிவமைப்பு பொறியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கே காணலாம்.

பாதுகாப்பான வடிவமைப்பு  


பொதுவாக, கட்டிடங்களை அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் பூமி அமைப்பு முக்கியமானதாகும். நமது பழங்கால கோவில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தமது உறுதியை இழக்காமல் இருப்பதற்கு, அவை அமைக்கப்பட்ட நிலப்பரப்பின் அமைப்பும் ஒரு காரணமாக உள்ளது. கட்டுமான அமைப்புகள் எந்த விதமாக இருந்தாலும், அவை பல்வேறு இயற்கை சக்திகளை தாங்கியே பூமியின் மீது நிலைத்து நிற்கின்றன. கட்டுமான பொறியாளர்கள் அத்தகைய இயற்கை சக்திகளை கணக்கில் கொண்டு கட்டமைப்புகளை தக்க வலுவுடன் இருக்கும்படி கவனித்துக்கொள்வது வழக்கம். பொதுவாக, அந்த இயற்கை சக்திகள் பளு அதாவது ‘லோடு’ என்று சொல்லப்படும். அவை, டெட் லோடு, லைவ் லோடு, விண்ட் லோடு, எர்த் பிர‌ஷர் மற்றும் டைனமிக் லோடு என்று பல வகைகளில் இருக்கின்றன. தமது வாழ்நாளில் ஒரு கட்டிடம் மேற்கண்ட பளுக்களை தாங்கும் வாய்ப்புகள் உள்ளதை கவனத்தில் கொண்டு இந்திய தர செயல்முறை விதிகளுக்குட்பட்டு வடிவமைக்கப்படுவதை பொறியாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்து கொள்வார்கள்.

இந்திய தர நிர்ணய கழகம்

மேலும், கட்டிட வடிவமைப்பு பொறியாளர்கள் தங்களது கட்டுமான வடிவங்களை பி.ஐ.எஸ் என்று சொல்லப்படும் இந்திய தர நிர்ணய கழகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டு பணிகளை செய்து முடிக்கிறார்கள். தங்களது வரைபடங்களில் அவற்றை கச்சிதமாகவும் குறிப்பிட்டிருப்பார்கள். அத்தகைய விவரங்களை சரியாக கட்டுமான பணிகளில் கடைப்பிடிக்கும்போது வலிமையான கட்டிடங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், தரமான கட்டுமான மூலப்பொருட்களை உரிய அளவுகளில் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும்.

கட்டமைப்பின் பயன்பாட்டு வடிவமைப்பு
 

மேலே நாம் கண்ட அனைத்துவிதமான தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் கடைப்பிடித்து கட்டுமான பணிகளை செய்வது மட்டும் போதாது. அத்துடன், அந்த கட்டமைப்பானது அது நிர்மாணிக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்தை முற்றிலும் பூர்த்தி செய்வதாகவும் இருக்கவேண்டும். அதாவது அஸ்திவாரம், பில்லர்கள், பீம்கள், சுவர்கள் மற்றும் தள அமைப்புகள் ஆகியவை கட்டுமான குறைபாடுகள் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பது அவசியம். உதாரணமாக, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே சுவர்களில் விரிசல்கள் வருவது, நீர்க்கசிவு உள்ள மேற்கூரைகள், குறுகிய காலத்தில் பீம்கள் வளைந்து விடுவது மற்றும் காரை உதிரும் தன்மை கொண்ட தூண்கள் ஆகியவை கட்டிட பயன்பாட்டில் குறைகளாக மாறுகின்றன. முற்றிலும் பழுதுகளே ஏற்படாத கட்டுமானத்தை அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் இந்திய தர செயல்முறை விதிகள் வரையறுத்த குறைந்தபட்ச அளவுக்கு உட்பட்ட, எளிதில் சரி செய்யக்கூடியதாக உள்ள குறைகள் மட்டும் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்