இயற்கையுடன் இணைந்த எட்டு திசை கட்டமைப்பு

24 மணிகள் கொண்ட ஒரு நாளின் ஒவ்வொரு பகுதியும் மனித இயல்பில் பல்வேறு உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நமது முன்னோர்கள் சரியாக அறிந்திருந்தனர்.

Update: 2017-04-07 21:15 GMT
24 மணிகள் கொண்ட ஒரு நாளின் ஒவ்வொரு பகுதியும் மனித இயல்பில் பல்வேறு உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நமது முன்னோர்கள் சரியாக அறிந்திருந்தனர். பூமியின் சுழற்சி, சூரியப்பாதை மற்றும் வடக்கு, தெற்கு ஆகிய துருவங்கள் ஆகியவை மனித உடல் இயக்கத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துவதை அறிந்து, அதன் வாயிலாக நன்மைகளை அடைய வீட்டின் பாகங்களை கச்சிதமாக பிரித்து வடிவமைத்தனர்.

திசை அமைப்புகள்

திசைகள் நான்கு மற்றும் கோண திசைகள் நான்கு ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒரு நாளை எட்டு பகுதிகளாக பிரித்தனர். அவர்களது கருத்துப்படி மனிதனது அனைத்து இயக்கங்கள் மற்றும் செயல்கள் ஆகியவை குறிப்பிட்ட திசை அமைப்பு மற்றும் அதன் இயல்பு ஆகியவற்றை சார்ந்து அமைவதாக முன்னோர்கள் கருதினார்கள். அதன்படி அமைக்கப்படாத வீடுகள் நல்ல விளைவுகளை தருவதில்லை என்றும் நம்பினார்கள்.

காந்த அலைகள்

கட்டிட அமைப்புகள் அவற்றின் அமைப்பு ரீதியாக பூமியில் ஒரு குறிப்பிட்ட நியதியில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவை வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டுமானால், வடக்கு மற்றும் தெற்கு துருவங்களிலிருந்து வெளிப்படும் காந்த அலைகளுக்கு இசைவான முறையில் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும்.  

கிழக்கின் முக்கியத்துவம்

மேற்கண்ட அடிப்படைகளின்படி சூரியன் உதிக்கும் கிழக்கு திசை என்பது உலக இயக்கங்களின் ஆரம்பமாகவும், அஸ்தமனம் என்பது இயக்கங்களின் தற்காலிக முடிவாகவும் பார்க்கப்படுகிறது. பூமியின் சுழற்சியால், வடக்கு மற்றும் தெற்கு திசைகள் சூரிய பாதையின் குறுக்குவாக்கில் இயங்கும் காந்த அலைகளை ஏற்படுத்துகின்றன. வடக்கு திசை பூமியின் மேல் பகுதியாகவும், கிழக்கு திசை சூரியன் உதிக்கும் பகுதியாகவும் இருப்பதால் வாஸ்துவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

விடியற்காலை

பொதுவாக, அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள காலகட்டத்தில், சூரிய கதிர்கள் கீழ்வானத்திலிருந்து வீட்டின் கிழக்கு பக்கத்தில் படியும். அதன் காரணமாக தலைவாசல், பூஜையறை, காலியிடம் ஆகியவை வீட்டின் கிழக்கு திக்கில் அமைக்கப்பட்டன.

காலை நேரம்

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சூரிய கதிர்கள் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் படிந்து வெப்ப நிலை உயரும். அந்த பகுதியில் உள்ள சமையல் அறை மற்றும் குளியல் அறைகளில் தண்ணீர் புழங்குவதால் காலையில் படியும் சூரிய ஒளி அங்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

மதிய நேரம்

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் உடல் இயக்கங்கள் சற்று தொய்வாக இருக்கும் நேரமாகும். அந்த நேரத்தில் உச்சிவானத்தில் உள்ள சூரிய கதிர்கள், இயக்கங்கள் குறைவான தெற்கு திசையில் படியும்.  

மாலை நேரம்

மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் சூரிய கதிர் வீச்சு வீட்டுக்கு தென்மேற்கு பாகத்தில் மிதமாக இருப்பதால், படிப்பதற்கும் இதர முக்கியமான வி‌ஷயங்களை கவனிப்பதற்கும் உகந்த நேரமாக இருக்கும்.

இரவு நேரம்


மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் சூரிய கதிர்கள் வீட்டுக்கு மேற்கு பகுதியில் குறைந்த ஒளியோடு படியும் காரணத்தால் மன மகிழ்ச்சி தரும் வி‌ஷயங்கள், குடும்ப அங்கத்தினர்களோடு உரையாடல், உணவு உண்ணுதல் போன்றவற்றிற்கு சரியான நேரமாக இருக்கும்.  

நள்ளிரவு

இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரையில் சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் இருப்பதாக கணக்கு. வடமேற்கு அறைகள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் விருந்தினர்களுக்கான அறையாக அமைக்கப்படும்.

அதிகாலை

நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை சூரியன் வீட்டின் வடக்கு பாகத்தில் இருக்கும். அது உறங்கும் சமயமாக இருப்பதால் மூளையின் இயக்கத்துக்கு தக்கவாறு தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் தலை வைத்து உறங்குவதால் அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் துவங்க இயலும்.

மேலும் செய்திகள்