குறைந்த செலவில் வீடு அமைக்க எளிய தொழில்நுட்பம்

இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டில் உள்ள கிராமங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுமான தொழில் நுட்பங்கள் அனைத்துமே வெளியுலகத்துக்கு அறிமுகமாகாமல் இருந்து வருகின்றன.

Update: 2017-02-24 21:30 GMT
ந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டில் உள்ள கிராமங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுமான தொழில் நுட்பங்கள் அனைத்துமே வெளியுலகத்துக்கு அறிமுகமாகாமல் இருந்து வருகின்றன.

உதாரணமாக, குஜராத் பகுதிகளின் பாரம்பரிய வீடுகளாக அறியப்பட்ட ‘புங்கா வீடுகள்’ என்ற குடியிருப்புகளை சொல்லலாம். எளிய கட்டுமான வழிமுறைகளை கொண்டதாகவும், பல்வேறு இயற்கை பாதிப்புக்களை தாங்கி நிற்பதாகவும், விலை குறைவான மூலப்பொருட்களுடனும் கட்டப்படும் குடியிருப்பாகவும் இவை அறியப்பட்டுள்ளன. கட்டுமான காலம் ஒரு மாதம் மட்டுமே என்பது இதன் விஷேசமாகும்.

கட்டுமான பொருட்கள்

புங்கா வீடுகள் களிமண், மரங்கள் மற்றும் புற்கள் கொண்டு கட்டப்படுகின்றன. மேலும், கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களை வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்காமல், அந்தந்த பகுதியில் கிடைக்கும் பொருட்கள் மூலம் சுய சார்பு கட்டுமானமாக கட்டப்படுகிறது.

வீடுகளின் அமைப்பு

வீட்டுக்கு ஒரு அறை மட்டும் வட்ட வடிவில் இருக்கும். தேவைப்படும் உபயோகங்களுக்கு ஏற்ப வீடுகள் இருக்கும். படுக்கையறையாக ஒரு
புங்காவும் வரவேற்பறையாக ஒரு புங்காவும், சமையலறையாக ஒரு புங்காவும் இருக்கும். ‘வாஸ்’ என்ற தாழ்வாரம் மூலமாக அவை அனைத்தும் இணைக்கப்படும். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் ‘புங்கா வீடுகள்’ கட்டப்படும்.

அஸ்திவாரம்

அஸ்திவாரம் 2 அல்லது 3 அடிகள் கொண்டதாக இவ்வகை கட்டமைப்பில் இருந்திருக்கிறது. மேலும் அஸ்திவாரமானது மேல்சுவர் எத்தகைய அகலத்தில் உள்ளதோ அதே அளவில் தரைக்கு அடியிலும் அஸ்திவாரமும் கட்டப்பட்டது. தற்போது சுவர் அளவை விடவும் அகலமாக அமையும்படி அஸ்திவாரமானது தேவைப்பட்ட அளவு அமைக்கப்படுகிறது.

சுவர் அமைப்பு

இத்தகைய வீடுகளில் சுவர்கள் உருளை வடிவ அமைப்பு கொண்டதாக இருப்பதுதான் முக்கியமான அம்சமாகும். மேலும் சுவர்கள் 6 முதல் 8 அடிகள் உயரம் கொண்டதாக இருக்கும். உள்ளூரில் அல்லது அருகில் கிடைக்கக்கூடிய மண்ணை பயன்படுத்தி சுவர் அமைக்கப்படும். சுவருக்கு உட்புறமாக செங்குத்தான மூங்கில்கள் நிறுத்தப்பட்டு, உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய பக்கங்களில் களிமண் பூசப்பட்டு சுவர் எழுப்பப்படும். பெண்களால் வீட்டின் புறச் சுவர்களில் அழகாக வண்ணமும் தீட்டப்படுகிறது.

கூரையின் கட்டுமானம்

இவ்வகை வீடுகளில் கூம்பு வடிவ கூரை அமைப்பு இருப்பது கவனிக்கத்தக்கது. அதாவது வெயில் மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளால் எவ்விதமான பாதிப்பும் உண்டாகாமல் அத்தகைய கூரைகள் காக்கின்றன. மேலும் அவை, ஓலைகள் அல்லது வேயப்பட்ட கீற்றுகள் கொண்டு நெருக்கமான மூங்கில் கம்புகளுக்கு இடையில் உறுதியாக அமைக்கப்படுகின்றன. கூரையின் எடையை சுவர்கள் நேரடியாக தாங்காதவாறு சுவருக்கு வெளியில் நிறுத்தப்படும் மூங்கில் தூண்கள் தாங்கும்படி செய்யப்படுகிறது. கூரையின் உட்பக்கமாக குறுக்கு வசத்தில் மரச்சட்டங்கள் வைக்கப்பட்டும் கூரைக்கு வலுவூட்டப்படும்.

உள்ளறை கட்டமைப்பு

ஒரே அறை மட்டும் கொண்ட கட்டமைப்பாக இருப்பதால், உள் அளவானது 10 அடியிலிருந்து 20 அடிக்குள் இருக்கும். வட்ட வடிவம் காரணமாக அந்த அளவானது குறுக்கு விட்ட அளவாக கணக்கிடப்படும்.

 கதவு மற்றும் ஜன்னல்கள்


ஒவ்வொரு ‘புங்கா’ வகை குடியிருப்புக்கும் ஒரே ஒரு தலைவாசல் மற்றும் இரண்டு ஜன்னல்கள் கொண்டதாக இருக்கும். ஒரு வாசல் அமைப்பாக இருப்பதால் சாலையின் அமைப்புக்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. பெரும்பாலும் கிழக்கு பார்த்த வாசல்கள் அமைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது இரண்டு ஜன்னல்கள் அமைக்கப்படும்போது வாசல் மற்றும் இன்னொரு ஜன்னல் ஆகியவற்றுக்கான இடைவெளிகள் கச்சிதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது.

சுலபமாக வேலை முடியும்

இத்தகைய அமைப்பு முறையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டுமான செலவும், காலமும் குறைவாக இருப்பதால் எளிய முறையில் கட்டிட வேலையை முடித்துவிடலாம்.

மேலும் செய்திகள்