தமிழக கோவில்களை கையகப்படுத்த முயற்சியா?
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய கலாசார மந்திரி பிரகாஷ்சிங் படேல் தெரிவித்த ஒரு செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.
‘‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம், கோபுர தரிசனம், கோடிப் புண்ணியம்’’ என்ற வகையில் தமிழ்நாட்டில் மக்கள் இறைவழிபாட்டை அதிலும் குறிப்பாக கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை தங்களுக்கு கிடைத்த புண்ணியமாக கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு தலபுராணம், தலவிருட்சம் உண்டு. தனியாக வழிபாட்டு முறைகளும் உண்டு. பண்டைய காலங்களில் பெரும்பாலான கோவில்கள், சமய உணர்வுமிக்க, பண்பாட்டை காக்கும் மன்னர்களால் கட்டப்பட்டன. பெரும்பாலான கோவில்களுக்கு பூஜைக்குத் தேவையான மலர்களை பறிக்க தனி நந்தவனங்களும், திருக்குளங்களும் உண்டு. தமிழ்நாட்டில் மட்டும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 17 சமண சமய திருக்கோவில்கள் உள்பட 38 ஆயிரத்து 652 கோவில்களும் உள்ளன. இந்த கோவில்களுக்கு எல்லாம் மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 238 ஏக்கர் 59 சென்ட் நிலம் உள்ளது. இதுமட்டுமல்லாமல், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 665 மனைகளும் உள்ளன. இவையெல்லாம் நமது முன்னோர்கள் கோவில்களுக்கு தானமாக எழுதி வைத்துவிட்டு சென்ற சொத்துகள்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய கலாசார மந்திரி பிரகாஷ்சிங் படேல் தெரிவித்த ஒரு செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தற்போது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பின் கீழ் 3 ஆயிரத்து 691 புராதன சின்னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு அதோடு விட்டுவிடாமல், தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான 7 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன என்று சொல்லி, இந்த கோவில்களை எல்லாம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்பதை சூசகமாக சொல்லியுள்ளார். ஏற்கனவே கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தனித்துவமாக செயல்படுவதைப்போல, இந்து சமய திருக்கோவில்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல், அந்தந்தப்பகுதி ஆன்மிக ஆன்றோர்கள், பாரம்பரிய அறங்காவலர்கள் மற்றும் சமுதாய பெரியோர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வட இந்தியாவில் ‘மந்திர்’ என்று அழைக்கப்படும் கோவில்கள் இன்னும் இவ்வாறு பெரியவர்கள் நிர்வாகத்தில் தனியாக இருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டிலும், கலாசாரத்தையும் பண்பாட்டையும், ஒழுக்க நெறிகளையும் வலியுறுத்தும் நூற்றாண்டு பழமைவாய்ந்த அந்தப்பகுதி கோவில்களின் ஆகம சாஸ்திரங்கள், தத்துவம் மற்றும் வழிபாட்டு பாரம்பரியத்தை நன்கு தெரிந்து கடைப்பிடிக்கும் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இப்போதெல்லாம் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தவேண்டும் என்றாலும் சரி, புனரமைப்பு செய்யவேண்டும் என்றாலும் சரி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே எல்லாம் இருப்பதால், அந்தப்பகுதியில் உள்ள பக்தர்களால் தங்கள் விருப்பப்படி, கோவிலுக்கு எந்த தர்ம காரியங்களும் செய்ய முடியவில்லை. திருப்பணி செய்வதற்குகூட, அரசாங்கத்தின் பல அனுமதிகளை பெறவேண்டும் என்பதால், பல கோவில்கள் திருப்பணி நடத்த முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே மத்திய அரசாங்க தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இல்லாமலும் கோவிலை பாரம்பரியமாக பாதுகாக்கும் இந்து மத பெரியவர்கள் நிர்வாகத்தில் இருந்தால்தான் ஒவ்வொரு கோவிலின் தனித்துவமான பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், நடைமுறைகள் பாதுகாக்கப்படும். ‘‘ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும்’’ என்பதுபோல, அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இல்லாமல், அந்தந்த ஊர்களில் உள்ள கோவில் தெய்வங்களின் மீது முழுபக்தியும், இறைப்பணி ஆற்றவேண்டும் என்ற உணர்வும் கொண்டவர்களின் நிர்வாகத்தில் இருப்பதே சாலச்சிறந்தது என்ற எண்ணம் இப்போது பக்தர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.