பக்தர்கள் மட்டுமல்ல, பகவானும் கிரிவலம் வருகிறார்.. இது திருவண்ணாமலை மகத்துவம்

அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும்.

Update: 2023-11-24 09:05 GMT

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது இந்த தலம். இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து காட்சி தருவதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருவண்ணாமலையில் பக்தர்கள் மட்டுமல்ல அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். அதாவது, கார்த்திகை தீபத் திருநாளுக்கு மறுதினமும், தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்றும், அண்ணாமலையார் திருவீதி உலாவாக கிரிவலம் வருகிறார்.

திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார். அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும்.

கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், துஷ்ட தேவதைகளை விரட்டுவதற்காகவும் அண்ணாமலையார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

Tags:    

மேலும் செய்திகள்