மொடக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மொடக்குறிச்சி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர், பொட்டுசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்பபூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு, இரவில் சாமி பிரதிஷ்டை நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை கலசம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6.30 மணிக்கு செல்வவிநாயகர், பொட்டுசாமி கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதன் பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி செல்வ விநாயகர், பொட்டுசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.