இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு; பிரதமர் மோடி பேச்சு

இந்தோ-பசிபிக் பகுதியில் குவாட் அமைப்பு குறுகிய காலத்தில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2022-05-24 02:56 GMT

டோக்கியோ,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடக்கிறது.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு சென்றார். தலைநகர் டோக்கியோவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டோக்கியோவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், 4 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது.

குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்துள்ளது. அதன் செயல்முறை சிறந்த வடிவம் பெற்றுள்ளது. நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனவுறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும் மற்றும் ஆர்வமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. தடுப்பூசி வினியோகம், பருவகால செயல்முறை, இடர்பாடுகளில் இருந்து மீண்டெழும் திறன், பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பரஸ்பர ஒருங்கிணைப்பு அதிகரித்திருந்தது. இதனால், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திர தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

இதேபோன்று ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமரான அந்தோணி அல்பேனீசுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார். பதவியேற்று 24 மணிநேரத்தில் எங்களுடன் இந்த உச்சி மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டுள்ளது குவாட் நட்புறவின் வலிமையையும் மற்றும் அதில் உங்களது ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்