ஈரான் சிறையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி

ஈரான் சிறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

Update: 2022-10-16 22:04 GMT

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் பெரும்பாலும் அரசு எதிர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இந்த சிறையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது அங்குள்ள துணி கிடங்கில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சிறைச்சாலை முழுவதும் பரவியது. இதில் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. கைதிகள் இடையிலான மோதல் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் சிறையில் பெரும் பதற்றம் உருவானது.

இதற்கிடையில் சிறையில் தீப்பற்றி எரியும் தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து, சிறைக்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டது. அவர்கள் சிறைக்குள் துப்பாக்கி மற்றும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனிடையே சிறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்