வேலைவேண்டி 600 மின்னஞ்சல்கள், 80 போன் கால்கள்- கடின உழைப்பால் உலக வங்கியில் பணி- அசத்திய இளைஞர்

கடின உழைப்பும், விடா முயற்சியும் தொடர்ந்து செய்து வந்தால் அதற்கு பலன் நிச்சயம் என்பதற்கு உதாரணமாக இளைஞரின் வாழ்க்கை பயணம் அமைந்துள்ளது.

Update: 2022-09-26 16:38 GMT

Image Courtesy: Linked In vatsalnahata

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த வத்சல் நகாடா என்ற இளைஞர் தனக்கு உலக வங்கியில் வேலை கிடைத்த அனுபவத்தை, தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த அனுபவம் பல்வேறு தரப்பினரை கவர்ந்துள்ளது.

600 மின்னஞ்சல்கள், 80-க்கும் மேற்பட்ட போன் கால்கள் என தனது தொடர் முயற்சியினால் கிடைத்த இந்த வேலை குறித்து அவர் பகிர்ந்த பதிவை, லிங்க்ட் இன் தளத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

தனது விடாமுயற்சி போராட்டம் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவலில், "கொரோனா உச்சம் தொட்டு இருந்த 2020 ஆம் ஆண்டுதான் யாலே பல்கலைக்கழகத்தில் நான் படித்து வந்தேன்.

அந்த சமயத்தில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தன. ஏனென்றால், மோசமான நாட்கள் வரும் என அச்சத்தில் அதை எதிர்கொள்ள இந்த நிறுவனங்கள் தயாராகி கொண்டு இருந்தன. எனக்கு வேலையும் இல்லை. இரண்டு மாதங்களில் நான் பட்டத்தையும் நிறைவு செய்ய இருந்தேன்.

இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் அழைத்து, நான் எப்படி இருக்கிறேன் என கேட்டபோது, நன்றாக இருக்கிறேன் என பொய் செல்லவே மிகவும் கடினமாக இருந்தது. இந்தியாவுக்கு வேலையில்லாமல் போகக் கூடாது என நினைத்தேன். மேலும், எனது முதல் சம்பளத்தை டாலரில் தான் பெறுவேன் என வைராக்கியத்துடன் இருந்தேன்.

என்னுடைய தொடர்பில் இருக்கும் அனைவரையும் தொடர்புகொண்டு வேலைக்காக பேசினேன். ஆனால், வேறு வேலைவாய்ப்பு தளங்களையோ, பிற வகையிலான விண்ணப்பங்களையோ நான் முற்றிலுமாக தவிர்த்தேன். அது கொஞ்சம் அபாயகரமானதுதான், இருப்பினும் அதை நான் செய்தேன்.

இரண்டு மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கனெக்‌ஷன் ரெக்யூஸ்ட்களை கொடுத்தேன். 600 க்கும் மேலான மின்னஞ்சல்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து வேலை வாய்ப்பு பற்றி விசாரித்தேன். இறுதியில் எனக்கு அந்த முயற்சிகள் பலன் அளித்தன.

2020ஆம் ஆண்டு மே மாதத்தில் எனது கையில் 4 வேலைகள் இருந்தன. அதில் உலக வங்கி பணியை நான் தேர்வு செய்தேன். எனது கதையை பகிர்வதன் நோக்கமே, யாரும் ஒருபோதும் முயற்சியை கைவிட்டு விடக்கூடாது என்பதே ஆகும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்ல நாட்கள் நிச்சயம் வரும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் சூழ்நிலையில் இளைஞர்கள் பலர் வேலைவேண்டி கடினமாக உழைத்து வருகின்றனர். இருப்பினும் சில தோல்விகளால் துவண்டு போகும் அவர்கள் பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில் கடின உழைப்பும், விடா முயற்சியையும் தொடர்ந்து செய்து வந்தால் அதற்கு பலன் நிச்சயம் என்பதற்கு உதாரணமாக வத்சல் நஹாடாவின் வாழ்க்கை பயணம் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்