இலங்கையில் பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி

கொரோனா பரவலைத் தடுக்க அவசரகால அடிப்படையில் பைசர் தடுப்பு மருந்தை பயன்படுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-05-08 17:53 GMT
கொழும்பு,

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகே இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டநாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

எனவே இலங்கை அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக், சீனாவின் சைனோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து தற்போது அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்துக்கும் இலங்கை அரசு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து இலங்கை சுகாதார அமைப்பு கூறும்போது, “இலங்கை கொரோனாவின் 3வது அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள 50 லட்சம் பைசர் தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்துள்ளோம். பைசர் தடுப்பு மருந்துகளை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்