அதிக கொரோனா பரிசோதனைகள்: அமெரிக்கா முதல் இடம், 2-வது இடம் இந்தியா! வெள்ளை மாளிகை தகவல்

உலக அளவில் அமெரிக்காவும் இந்தியாவும்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனைகளை செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-17 09:47 GMT
வாஷிங்டன்,


 சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 35 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  உலக  அளவில் 13.6 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,86,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, ஆகிய நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்களிடையே அச்சம் நிலவினாலும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை கூடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். பிற எந்த நாடும், அமெரிக்கா அளவுக்கு கொரோனா  பரிசோதனை செய்யவில்லை என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

இந்த சூழலில்,  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறும் போது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் இவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில், இந்தியா உள்ளது. இந்தியாவில் 1.2 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் நாங்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளோம்” என்றார். 

மேலும் செய்திகள்