செந்தில் பாலாஜி - திமுக எம்.பி. வீடுகளில் வருமானவரி சோதனை
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி , திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
இன்று காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் வருமான சோதனை நடந்து வருகிறது. இவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் ஆவார். இவரது இல்லத்தில் தான் ஐபேக்கின் அலுவலகமும் இயங்கி வருகிறது.
சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கும் அதே நேரத்தில் திமுக ஐடி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை எம்.பியாக இருப்பவர் சி.என்.அண்ணாதுரை. இவர், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். மேலும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து பண பட்டுவாடா நடைபெறுவதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப். 02) காலை சோதனையிட்டதில், பணம் ஏதும் சிக்காததால், அவர்கள் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, வருமான வரித்துறையினர் அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பணியில் சுமார் 8 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.