திமுக - காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும் -பிரதமர் மோடி

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி மதுரை பிரசார கூட்டத்தில் பேசினார்.

Update: 2021-04-02 07:40 GMT
படம்: ANI
மதுரை 

மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தல் என கூறினார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுபவர் பிரதமர் மோடி. நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர் பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர் பிரதமர் மோடி. உலகமே வியக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியை  வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஒரே ஆண்டி கொரோனா தடுப்பூசியை கொண்டுவந்தவர் மோடி என கூறினார்.

வெற்றிவேல் வீர வேல் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? என தமிழில் பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி  தொடர்ந்து அவர்  பிரசார கூட்டத்தில் பேசும் கூறியதாவது:-

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சரியான திட்டம் எதுவும் இல்லை என்றால் பேசக்கூடாது. பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் முட்டாள்களல்ல. அவர்கள் தங்களைத் தமிழ்ப் பண்பாட்டின் பாதுகாவலர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது.

அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்.

இந்த நிலம் சுந்தரேஸ்வர் கடவுலின் நிலம் . நீர் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும் பல திரைப்படங்கள் உள்ளன.  2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க திட்டம்.இந்த் தொடங்கப்பட்டதிலிருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட  இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய்மூலம் வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வ்ழங்கும் திட்டம் நிறைவேறி உள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பிராந்திய மக்கள் வலுவான மனமும் பெரிய இதயமும் கொண்டவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தார்கள். மதுரை அவர்களை ஏற்றுக்கொண்ட விதம் ஒரே பாரதம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுக அங்கம் வகித்த அமைச்சரவையில்தான் ஜல்லிக்கட்டைத் தடை செய்தார்கள். அதை காட்டுமிராண்டித்தனம் என்று ஒரு மூத்த அமைச்சர் சொன்னார். இப்போது சொல்லுங்கள். காங்கிரசும் திமுகவும் அவர்கள் நிலையை நினைத்து வெட்கப்பட வேண்டும். 

2016-17இல் இந்த மக்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நினைத்தபோது அவர்கள் மனவேதனை எனக்குப் புரிந்தது. அதனால்தான் நான் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.

திமுகவும் காங்கிரசும் நமக்கான பாதுகாப்பையோ, கண்ணியத்தையோ உத்தரவாதப்படுத்த முடியாது. சட்டம்- ஒழுங்கு அவர்களால் சீர்குலைந்தது. திமுகவினர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் இந்த மதுரையை வன்முறை நகரம், கொலை நகரம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கினார்கள். திமுகவும் காங்கிரசும் திரும்பத் திரும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றன. இது எனக்கு ஆச்சர்யம் தரும் விஷயமல்ல அது அவர்கள் இயல்பு.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்தது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மதுரை நகரம் தூங்கா நகரம். இந்த நகரம் எப்போதும் தூங்கியதே இல்லை. விழித்திருக்கும் நகரம் இது. இந்த நகரம் அரசியல் யதார்த்தத்திற்காகவும் விழித்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் விஷயத்திலும் மதுரை விழிப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன் என கூறினார்.

மேலும் செய்திகள்