உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று விருதுநகர், ராமேசுவரத்தில் பிரசாரம்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) விருதுநகர், ராமேசுவரத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
விருதுநகர்,
விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) விருதுநகர் வருகிறார். இதற்காக அவர் மதுரை வந்து, இன்று பிற்பகல் 3 மணி அளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் -அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி திடலில் இறங்குகிறார்.
அங்கிருந்து விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு அருகே உள்ள நகராட்சி திடலுக்கு வந்து பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
ராமேசுவரத்தில் பிரசாரம்
விருதுநகர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டரில் ராமேசுவரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணி அளவில் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர், அங்கிருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் பாம்பன், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் வந்து பேசுகிறார். இரவில் அங்குள்ள ஓட்டலில் தங்குகிறார்.
நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் ராமேசுவரம் கோவிலில் ஸ்படிக லிங்க தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் 6 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் முடித்த பின்னர் கார் மூலமாக தனுஷ்கோடி செல்ல உள்ளார். இந்த தகவலை பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத் விருதுநகர், ராமேசுவரம் வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.