அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க நியாயமான காரணம் இல்லை: தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றம் மூலமே ஏற்படும்

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க நியாயமான காரணம் இல்லை: தமிழகத்துக்கு விடிவு காலம் ஆட்சி மாற்றம் மூலமே ஏற்படும் கே.எஸ்.அழகிரி அறிக்கை.

Update: 2021-03-30 21:17 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.13 லட்சம் கோடியாக உயர்ந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தொகையில் 1 சதவீதத்தை ஒதுக்கினால் ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முடியும். ஆனால், ஏழை, எளியவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, அதானி - அம்பானியின் சொத்துக்களைப் பெருக்குவதற்குத்தான் முனைப்பு காட்டுகிறார்.

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்தியாவைப் பொருளாதார அழிவை நோக்கி பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பொது முடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு தாக்குதல்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை நிராகரித்ததைப்போல, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்து நிராகரிக்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது. 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை. தமிழகத்துக்கு விடிவுகாலம் ஆட்சி மாற்றத்தின் மூலமே ஏற்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்