நான் சளைக்கவில்லை, கட்சியை கலைக்கவில்லை - லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்
நான் சளைக்கவில்லை, கட்சியை கலைக்கவில்லை; நாற்காலியில் அமர விரும்பவில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், தேர்தலில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், அமைப்புகளும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றன. ஆனால், சில அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், சில அமைப்புகளும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காத நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன. அந்த வகையில், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கடந்த 27-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடாதது குறித்தும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காதது குறித்து நடிகரும், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ராஜேந்தர் கூறியதாவது,
நான் 1984 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அரசியல் களத்தில் உள்ளேன். இப்போதும் சொல்கிறேன் நான் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடவேண்டுமென்றால் தனித்து நின்று வாக்குசதவிகிதம் காட்டவேண்டும். ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். நாங்கள் 5 லட்ச ரூபாயையும், 10 லட்ச ரூபாயையும் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள் என்று நின்றுகொண்டிருந்தால் எப்படி? தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று வியூகம் தெரியும். நான் சளைக்கவில்லை, கட்சியை கலைக்கவில்லை. இன்றைக்கும் போராடுகிறேன். நான் ஓய்வெடுக்கவிரும்பவில்லை. சாய்வு நாற்காலியில் அமர விரும்பவில்லை.
நான் சென்று பெரிய கட்சிகளிடம் 12 சீட் கேட்டால், அவர்களை பொருத்தவரை நான் கேட்கும் சீட்களை அவர்களால் கொடுக்க முடியாது. அவர்கள் கொடுக்கும் சீட்களை என்னால் ஏற்க முடியாது. அவர்கள் அவர்களது கட்சி சின்னத்தை தான் எனக்கு ஒதுக்குவார்கள். எங்களை போன்ற சிறிய கட்சிகளையெல்லாம் ஏதாவது காரணம் கூறி ஒதுக்குவார்கள். எதற்கு பிரச்சினை.
திமுக, அதிமுக இரண்டும் பெரிய கட்சிகள். அவர்கள் அவர்களது பிரச்சினைகளை பார்த்துக்கொள்ளட்டும். நான் அவர்களுக்காக பேச விரும்பவில்லை. நான் மக்களுக்காக பேச விரும்புகிறேன்’ என்றார்.