திமுகவை வீழ்த்தவும் முடியாது, நினைத்துப்பார்க்கவும் முடியாது - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
திமுகவை வீழ்த்தவும் முடியாது, அதை நினைத்துப்பார்க்கவும் முடியாது என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூர்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம், தாராபுரம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கேயம் பேருந்து நிலைய பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தின்போது முக ஸ்டாலின் பேசியதாவது:-
முதலமைச்சர் பழனிசாமி தோல்விபயத்தில் வாய்க்கு வந்தபடி புலம்பி வருகிறார். கடைசி கட்டத்தில் புலம்பத்தொடங்கியுள்ளார். திமுகவை வீழ்த்துவதற்கு என்னையே பலியிட தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டவர் முதலமைச்சர் பழனிசாமி. தோல்வியை ஒப்புக்கொண்ட முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
பழனிசாமி அவர்களே திமுகவை அழிக்க போகிறேன் என்று கூறியுள்ளீர்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழித்து போனார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. திமுகவை வீழ்த்தவும் முடியாது, அதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. திமுகவை வீழ்த்த ஒருவன் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் முடியாது.
அண்ணா காலத்தில் இருந்து பார்த்து வருகிறோம். பல கயவர்கள் திமுகவை வீழ்த்தப்போகிறோம் என்று கிளம்பினர். திமுக-வுக்கு எதிர்ப்பு வளரவளரதான் திமுக வளரும். இதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். கலைஞர் இல்லாததால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கின்றனர். கலைஞர் இல்லாவிட்டாலும் கலைஞரால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் இந்த இயக்கத்தில் உள்ளனர் மறந்துவிடாதீர்கள். கலைஞர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
திமுகவை வீழ்த்த எத்தனை தீய சக்தி வந்தாலும் திமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. திமுகவை வீழ்த்த முதல்வர் பழனிசாமி தனது உயிரை தரவேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீண்டகாலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப்பொறுப்பேற்று திமுக ஆளும் காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீர் பாசனத்திற்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்துப்படும். தாமிரபரணி - கருமேனி ஆறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றிபெறும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. கருத்துக்கணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று தெளிவாக கூறுகிறது. கருத்துக்கணிப்புகளை நினைத்து ஒய்வெடுக்கக்கூடாது. கடைசி வரை பணி செய்ய வேண்டும்.
அதிமுக, பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. ஒரு இடத்தில் அதிமுக வெற்றிபெற்றாலும் அது பாஜக வெற்றியாக தான் இருக்கும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 120 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்றார்.