தி.மு.க. எம்.எல்.ஏ.வின் 18 இடங்களில் வருமான வரி சோதனை; கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல்

தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் நடந்த வருமான வரி துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-25 17:35 GMT
திருவண்ணாமலை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது.  ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  இந்த தேர்தலில் தேசிய காட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது.  174 இடங்களில் போட்டியிடும் அக்கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எ.வ. வேலு போட்டியிடுகிறார்.  இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார்.  இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் காலை 11 மணி முதல் தற்போது வரை சோதனை தொடர்ந்து வருகிறது.

இதில், எ.வ. வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடத்தினால் பயந்து போய் விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது.  இந்த வருமான வரித்துறை சோதனைகளால் தி.மு.க.வினர் துவண்டுவிட மாட்டார்கள்.  அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் நடந்த வருமான வரி துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்