வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், நியாயமாகவும் உள்ளன என வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-25 00:57 GMT
சென்னை, 

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வாரம் தி.மு.க. ஒரு கோரிக்கை மனு அனுப்பியது. அதில், ‘15 ஆண்டுகள் பழமையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தில் இருந்தும் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும். வாக்குகள் பதிவான பிறகு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்’ என்று பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் எந்த ஒரு பதிலும் அளிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

பதற்றமான

வாக்குச்சாவடிகள்

அவர் தன் வாதத்தில், ‘தற்போது தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்கான கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு எந்திர பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மாவட்ட கலெக்டரின் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு அறைக்குள் தாசில்தார் ஒருவர் சென்றார். எனவே, வாக்கு எந்திரங்கள் உள்ள இடத்தில் ஜாமர் கருவி பொருத்துவது அவசியம்’ என்று வாதிட்டார்.

பதில் அளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ‘வெப் கேமரா' பொருத்துவது சாத்தியமில்லை. ஆனால் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தப்படும். மதுரை நாடாளுமன்ற தொகுதி பாதுகாப்பு அறைக்குள் தாசில்தார் சென்றாரே தவிர, எதிலும் மாற்றம் செய்யவில்லை. இதுதொடர்பான விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வேண்டும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இந்த வாரமே ஆலோசனை நடத்தவேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்பாகவும் மின்னணு எந்திரங்களை பாதுகாப்பது, அங்கீகரிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியல், ‘விவிபேட்' எந்திரங்களை அதிகரிப்பது, தேர்தலுக்கு பிறகு பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்துவது ஆகிய மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து வருகிற 29-ந் தேதி தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

நேர்மையாகவும்,

நியாயமாகவும்...

மேலும், ‘தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், நியாயமாகவும் உள்ளன என வாக்காளர்கள் திருப்தி அடையும் வகையில் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மக்களுக்கு சந்தேகம் ஏற்படும்விதமான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்