"மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
மக்களிடம் தனக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தொகுதிக்கு உள்பட்ட சூளைமேடு பகுதியில் வீதிவீதியாக சென்று பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பாஜக மாநில தலைவருக்காக பிரசாரம் செய்ய ஆசை உள்ளது. அனைவரும் அவரவர் தொகுதியில் பரபரப்பாக உள்ளோம். பிரசாரம் செய்ய எங்களுக்கு 15 நாட்கள் தான் கொடுத்துள்ளனர். நேரம் மிக குறைவாக உள்ளது. மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்போழுதுதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் என மக்கள் என்னிடம் கூறுகின்றனர்’ என்றார்.