தொகுதி கண்ணோட்டம்: தாம்பரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள தொகுதி தாம்பரம்.
தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய தொகுதியாக இருந்த தாம்பரம், தொகுதி சீரமைப்புக்கு பிறகு சிறிய தொகுதியாக மாறியது.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த வளாகத்தில் உள்ளது. நூற்றாண்டுகளை கடந்த சென்னை கிறிஸ்தவ கல்லூரி தாம்பரம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. தாம்பரம் விமானப்படை தளம், தாம்பரத்தின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது. தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் என முக்கிய அரசுத்துறை நிறுவனங்கள் தாம்பரம் தொகுதியில் உள்ளன. வரலாற்று புகழ்பெற்ற மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில்,
தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.
தாம்பரம் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சி, அகரம் பேரூராட்சி, திருவஞ்சேரி ஊராட்சி, முடிச்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.தாம்பரம் தொகுதியை பொறுத்தவரை வன்னியர்கள், நாயுடு, ரெட்டியார்கள், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், யாதவர்கள் கணிசமாக உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய வர்த்தக பகுதியான தாம்பரத்தில் வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பெருங்களத்தூர் பகுதிகளில் புதிய ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
1977-ம் ஆண்டு முதல் இதுவரை இந்த தொகுதியில் 10 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த தொகுதியில் தி.மு.க. கையே ஓங்கி இருப்பதாக தெரிகிறது.1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனு ஆதி, 1980-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் பம்மல் நல்லதம்பி, 1984-ம் ஆண்டு அ.தி.மு.க.வைச் சேர்ந்த எல்ல ராசமாணிக்கம், 1989-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், 1991-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணன், 1996 மற்றும் 2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், 2006-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா, 2016-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்காளர்கள் 3,72,586
பதிவான வாக்குகள் 2,35,552
எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.) 1,01,835
சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 87,390
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவு மக்கள் வரும் தாம்பரம் பகுதியில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லை. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மாநகர பகுதிகள் மற்றும் காஞ்சீபுரம், வேலூர் செல்லும் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களை நிறுத்த ஒரு முறையான பஸ் நிலையம் அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தும், இதுவரை தாம்பரத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே தாம்பரம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தாம்பரத்தில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பாலாற்று குடிநீர், தாம்பரம் நகராட்சி மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பாலாற்று குடிநீர் திட்டத்தை கொண்டு வருவோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் அளித்தும், இதுவரை அந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை. தொகுதி முழுவதும் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பாலாற்று நீரை நம்பியே உள்ளனர். எனவே தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாலாற்று குடிநீரை வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் நகராட்சி பகுதியில் ரூ.174 கோடியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. இதனால் தாம்பரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட முடியாததால் தார் சாலைகள் அமைக்காமல் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை விரைந்து முடிக்கவேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தாம்பரம் தொகுதி முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்திலும் கழிவுநீர் தேங்கி உள்ளதால் நீர் நிலை ஆதாரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. தாம்பரத்தில் மழை வெள்ள காலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படுவதால் அதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் பல இடங்களில் ஒவ்வொரு மழையிலும் வெள்ளநீர் தேங்குவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே நிர்வாகம் பாலம் கட்டும் பணியை முடித்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை ஆமை வேகத்தில் செய்து வருவதாக
இந்த தொகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தாம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, அ.ம.மு.க. சார்பில் கரிகாலன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவஇளங்கோ, நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 4,13,552
ஆண்கள் 2,05,751
பெண்கள் 2,07,748
திருநங்கைகள் 53