கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை ஒபாமாவுடன் ஒப்பிட்டு வைகோ பிரசாரம்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், மு.க.ஸ்டாலினை ஒபாமாவுடன் ஒப்பிட்டு வாக்குசேகரித்தார்.

Update: 2021-03-18 21:05 GMT
சென்னை, 

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக செம்பியத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பேசினர்.

9 மேம்பாலங்கள்

கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்தியாவில் மாநகராட்சி சார்பில் மேம்பாலங்கள் கட்டியது என்ற வரலாறு கிடையாது. அந்த பெருமை மு.க.ஸ்டாலினுக்குதான் உண்டு.

அண்ணா மக்களிடம் செல்லுங்கள் என்று சொன்னார். அதை அப்படியே செய்பவர் மு.க.ஸ்டாலின்.

ஒபாமாவும்..., மு.க.ஸ்டாலினும்...

நான் உலக அரசியலை உற்று நோக்குபவன். ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன்பு செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் மாதம் இருமுறை தனது தொகுதிக்கு செல்வார். தன்னுடைய தொகுதியில் அனைத்து மக்களையும் சந்தித்து குறைகளை கேட்பார். அந்த குறைகளை போக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பார். நான் அதன்பின்னர் பார்க்கிறேன். வாரம் ஒருமுறையாவது தன்னுடைய தொகுதிக்கு வருகிற அரசியல்வாதி இருக்கிறார் என்று கேட்டால், அது மு.க.ஸ்டாலின்தான். அவர் வீட்டில் இருக்கிறாரா? அல்லது தொகுதியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. அதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை.

அப்படிப்பட்ட கடமையை செய்வதால்தான் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். இந்த தொகுதியில் இருக்கிற ஒவ்வொருவரும், ‘இங்கே மு.க.ஸ்டாலின் வேட்பாளர் அல்ல, நான்தான் வேட்பாளர்‘ என்று கருதிக்கொண்டிருக்கிற நிலைமை இருக்கிறது.

எனவே மு.க.ஸ்டாலினை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்