தென்மண்டல ஐஜி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்மண்டல ஐஜி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-17 16:30 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தென் மண்டல காவல் சரக தலைவர் (ஐ.ஜி) முருகன் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணையம் நியமித்த சிறப்பு காவல் பார்வையாளர் அளித்துள்ள தகவல் அடிப்படையில், தென் மண்டல காவல் ஐ.ஜி எஸ். முருகன் தேர்தல் பணி அல்லாத பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ஆர். அன்பரசன், எம். வேல்முருகன், ஹெச். கிருஷ்ணமூர்த்தி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வரும் பி. கோவிந்தராஜா, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றி வரும் எம்.எஸ்.எம். வளவன், வேலூரில் பணியாற்றி வரும் ஈ.திருநாவுக்கரசு, விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவில் பணியாற்றி வரும் எம்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வரும் பி.டி. சுபாஷ்,. திருச்சியில் மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றி வரும் பி.கோபாலன்சந்திரன் ஆகியோருக்கும் தேர்தல் பணி எதுவும் ஒதுக்காமல் அனைவரையும் காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்