கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார், கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளன. மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்தசூழலில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு, கோவை விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்கு வந்த அவர் முதல்முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், இன்று மாலை 6 மணிக்கு கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.