அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல்
அமமுக - தேமுதிக இடையே கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 32 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 195 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் 3 கட்டங்களாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.