வேட்பாளர் பட்டியல் கோஷ்டி பூசலால் காங்கிரஸ் திணறல்;தொண்டர்கள் கலக்கம்

தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள இந்த கோஷ்டி மோதல் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-03-13 15:28 GMT
சென்னை

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.

கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டன

விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார்.

தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 13) மாலை அல்லது நாளை (மார்ச் 14) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 பல தொகுதிகளைத் தன் குடும்பத்தாருக்கு பெற்றுத் தருவதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத்திற்கும் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.பி.க்களாக உள்ளனர்.

தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட  தேர்தலுக்கு படுவேகத்தில் தயாராகி வரும் நிலையில், தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள இந்த கோஷ்டி மோதல் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்