புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல்ல செய்யவில்லை
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதிபங்கீடு, கூட்டணி உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அதேபோல், தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்கும் தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.
வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் நிபந்தனை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் மற்றும் டெபாசிட் தொகையை செலுத்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான இன்று புதுச்சேரியில் இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 30 தொகுதிகளில் ஒருவர் கூட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.