தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தமிமுன் அன்சாரி அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு கடிதம் அளித்திருந்தது.

Update: 2021-03-11 22:15 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு கடிதம் அளித்திருந்தது. அதில், தங்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை தொடரலாமா? அல்லது திரும்ப பெறலாமா? என்பது குறித்து, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்பட நிர்வாகிகள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கூட்டணிக்கு தங்களது ஆதரவு தொடரும் என்று தெரிவித்தனர். அப்போது மு.க.ஸ்டாலினிடம், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.

பின்னர் தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘தி.மு.க. கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. எனினும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்' என்றார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்