புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி அ.தி.மு.க.-பா.ஜ.க. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்படவில்லை.

Update: 2021-03-11 21:17 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜ.க. பிரித்துக்கொள்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இதில் 4 தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. இது அ.தி.மு.க.வை அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட 4 இடங்களை பிடித்த அ.தி.மு.க.வுக்கு அதே எண்ணிக்கையில் தருவதை ஏற்க முடியாது. எனவே கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என்று புதுச்சேரி அ.தி.மு.க.வினர் தங்கள் கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.சி.சம்பத் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அ.தி.மு.க. - பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

உடன்பாடு எட்டப்படவில்லை

பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பா.ஜ.க. மறுத்துவிட்டது. இதனால் இழுபறி உருவானதால் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இங்கு பேசி்ய விவரங்களை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். அதன்பின் அவர்கள் முறைப்படி தெரிவிப்பார்கள் என்றார்.

பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறுகையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்