அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை

அமமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

Update: 2021-03-10 06:58 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்திலும் மும்முரம் காட்டி வருகின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் முதலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தே.மு.தி.க.வுடன் முதலில் இருந்தே பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டாமலேயே இருந்தது. மொத்தம் 3 கட்டங்களாக அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட போது வழங்கப்பட்ட தொகுதிகளுக்கு இணையாக, இடங்களை ஒதுக்க தே.மு.தி.க. கேட்டு வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல், தொடர்ந்து இழுபறியிலேயே இருந்தது.

இந்த நிலையில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தே.மு.தி.க. விலகியது. மேலும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமமுக சார்பில் பழனியப்பன், மாணிக்கராஜா பங்கேற்றனர். தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்