கூட்டணியில் இருந்து விலகியது தே.மு.தி.க: அ.தி.மு.க.விற்கு இனி இறங்கு முகம் தான் விஜயபிரபாகரன் பேச்சு
கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில், இனி அ.தி.மு.க.வுக்கு இறங்கு முகம் தான் என்று பண்ருட்டியில் நடந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் பேசினார்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய தகவலை கூறுகிறேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிவிட்டது.(அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் இதை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.)
அ.தி.மு.க.விற்கு இனி இறங்கு முகம் தான். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று நினைத்து கொண்டு உள்ளார்.
எடப்பாடியில் தோல்வி
தே.மு.தி.க. தலை போனாலும், ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் தோல்வியை தழுவுவார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, 1,500 ரூபாய் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் எங்கே இருந்து பணம் தர போகிறார்கள். மக்களுக்கு இலவசம், இலவசம் என கூறி மக்களை சோம்பேறியாக்குகிறார்கள்.
நமக்கு நேரம் வந்துவிட்டது. குகையிலிருந்து சிங்கம் புறப்பட்டு விட்டது. இனி தொகுதிகளை வேட்டையாடுவது தான் வேலை. விருத்தாசலம் தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றது போன்று, விருத்தாசலம் அல்லது பண்ருட்டியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும். அவரை நாம் வெற்றி பெற செய்து, சட்டசபையில் நம் குரல் ஒலிக்க வேண்டும். இதற்கு நல்ல முடிவை தலைவர் எடுப்பார்.
எங்களை முதுகில் குத்தியவர்களை நாங்கள் திருப்பி குத்த வேண்டும். அதை நீங்கள் தேர்தலில் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசியலில் மூத்தவர்கள் நாங்கள்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜயபிரபாகரனிடம் தி.மு.க., மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க.வுடன் கூட்டணி செல்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க.வுடன் நாங்கள் எப்படி செல்வோம். அவர்கள் இப்போது தான் களத்திற்கே வருகிறார்கள். அரசியலில் மூத்தவர்கள் நாங்கள் தான். அவர்கள் தான் எங்களை தேடி வரவேண்டும். எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தான். அனைத்தையும் தலைமை முடிவு எடுக்கும் என்று பதில் கூறினார்.