தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற முடிவா? மனிதநேய ஜனநாயக கட்சி இன்று ஆலோசனை
தொகுதி பங்கீட்டுக்கு அழைக்காததால் விரக்தி தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற முடிவா? மனிதநேய ஜனநாயக கட்சி இன்று ஆலோசனை.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து தமிமுன் அன்சாரி விலகினார். அவர், மனிதநேய ஜனநாயக கட்சியைத் தொடங்கினார். அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெற்றது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் நாகை தொகுதியில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டில் அவர் இருந்து வந்தார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால், அந்த கூட்டணியில் இருந்து தமிமுன் அன்சாரி விலகினார். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அவர்களுக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அதில், தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவு கடிதத்தை திரும்பப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.