தமிழக சட்டசபை தேர்தல்: வரும் 12ஆம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வரும் 12-ம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தலை பொறுத்தவரை கட்சிகளின் தேர்தல் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணியில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி இடம்பெற்றுள்ளது. வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.