கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரமாக இழுபறியில் இருந்துவந்த திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீட்டில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேவேளை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றிற்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். முக ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில்
கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.